பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் 75 பேர், இந்தியா வின் அமர்த்தியா சென், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற நான்கு பேர், ஐ.நா., முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர், ஏழை நாடுகளிலும், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலும் வசிக்கின்றனர். கரோனா தாக்கத்தால், இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், நிதியுதவி கோரி, சர்வதேச நிதியத்தை அணுகியுள்ளன.
மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் கூட்டத்தில், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு, போர்க்கால அடிப்படையில், 375 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், 50 விழுக்காடுதான் வழங்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், உலகளவில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், ஜி-20 நாடுகள் உறுதி அளித்தபடி, ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு, உடனடியாக,188 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதன்மூலம், ஏழை நாடுகள், மீண்டும் கரோனா அலை தோன்றுவதைத் தடுக்க முடியும். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 40 நாடுகள் உள்பட, 76 நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.