கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறையில் உள்ள ஆயுள் தண்டனை மற்றும் கடுங்காவல் தண்டனை குற்றவாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறை திரும்பும் கைதிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மற்ற கைதிகளுக்கு பாதிக்கப்படாமல் இருக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலை, பெண்களுக்கான சிறப்பு சிறை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு புதிதாக வரும் கைதிகளை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு விடுப்பு முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்புகிறவர்கள் மற்றும் பரோல் நீட்டிப்பு பெறுபவர்களை தனிமைப்படுத்தவும் சிறையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை புழல் சிறையில் விடுப்பு முடிந்து சிறைக்கு திரும்பிய இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட நான்கு கைதிகளும், கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஒரு கைதியும் திருச்சி மத்திய சிறையில் 2 ஆயுள் தண்டனை கைதிகளும், சக்ரம் மத்திய சிறையில் 2 ஆயுள் கைதிகள் உள்பட 3 பேரும், கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் என 11 பேர் மட்டுமே பரோலில் உள்ளனர் என கூறப்பட்டது.
இதையடுத்து, கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், ஜூன் 15ஆம் தேதிக்குள் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.