நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளியூரில் ஏற்கனவே வேளாண் கிட்டங்கி உள்ளது. இந்நிலையில் திசையன்விளை வட்டார விவசாயிகளின் நலனுக்காக அவர்கள் உற்பத்தி செய்யும் நெல் முதலான தானியங்களை சேமித்து வைக்கவும் அதன் மூலமாக ஈட்டுறுதி கடன் பெறவும் வசதியாக திசையன்விளை அருகே வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் இந்த கோரிக்கையை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் கட்டப்படவுள்ள திசையன்விளை வேளாண் ஒழுங்குமுறை கூடத்திற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த கட்டடம் கட்டுவதற்கான பணிகளை இன்பதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வேளாண் ஒழுங்கு விற்பனைக்கூட கட்டடப் பணிகளை நேற்று (ஜூன் 15) இன்பதுரை எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், " ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் இந்த வேளாண்மை விற்பனை கூடத்தில் 1000 மெட்ரிக் டன் எடையுள்ள உணவு தானியங்கள் சேமித்து வைக்க முடியும். மேலும் இங்கு ஒரு உலர் களமும், ஏலகூடமும் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் திசையன்விளை வட்டார விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் முதலான தானியங்களை எவ்வித வாடகையுமின்றி 180 நாள்கள்வரை இங்கு சேமித்து வைக்க இயலும்" என்றார்.