திருவள்ளூர் மாவட்டம், ஆன்டர்சன் பேட்டை பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஏறிக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு கூடினர். பின்னர் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த முதியவரை உயிருடன் பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் நேமம் கிராமத்தைச் சேர்ந்த டில்லி (வயது 54). தற்போது சுங்குவார்சத்திரம் முதல் அலமாதி வரை உயர் மின் கோபுரம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த உயர் மின் கோபுரம் தனது விவசாய நிலத்தில் பதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். இது குறித்து வெள்ளவேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.