பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இதனிடையே, செப்டம்பர் 4ஆம் தேதி முதல் இவரை காணவில்லை. இது குறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வேப்படி பாலக்காடு சாலையில் உள்ள குடிநீர் கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல், தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், சடலமாக கிடந்தது காணாமல் போன கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. மேலும், கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டாரா (அ) கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.