தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிகள் திறப்பின்போது விலையில்லாத சீருடைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்தச் சீருடைக்கான துணிகள் உற்பத்தி ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் கரோனா நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டு, தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
இதனிடையே கரோனா நோய் காரணமாக பள்ளித்திறப்பு தாமதமானாலும் பள்ளித் திறப்பின்போது திட்டமிட்டபடி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விசைத்தறிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் விலையில்லா சீருடைகளுக்கான துணிகள் உற்பத்தி பணி தற்போது வெகு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக ஈரோட்டிலுள்ள வீரப்பன்சத்திரம், சோலார், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 47 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சீருடைகள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு அளவில் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சீருடைக்கான துணிகள் உற்பத்தியில் 80 சதவிகிதம் ஈரோட்டில்தான் தயாரிக்கப்படும் நிலையில் தற்போது வரை 60 சதவிகிதம் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் இறுதிக்குள் மீதிச் சதவிகித துணிகள் உற்பத்தி நிறைவு செய்யப்படுமென்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளி திறப்பு இதுவரை முடிவு செய்யப்படாத நிலையில் பள்ளித் திறப்பு தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு பள்ளித் திறப்புக்கு முன்னதாகவே விலையில்லா சீருடைகள் வழங்குவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஈரோட்டில் விலையில்லா சீருடைகள் உற்பத்தி செய்யப்பட்டுவரும் அனைத்து விசைத்தறி நிலையங்களிலும் அரசு விதிமுறைகளும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுவருவதாகவும், தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தவறாமல் பின்பற்றப்பட்டுவருவதாகவும் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.