சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம். இந்த மையத்தில் அமைந்துள்ள ஆற்றல் மையத்தில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான உபயோகமில்லாத 52 பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) காலை ஆற்றல் மையத்துக்கு ஊழியர் ஒருவர் சென்று பார்வையிட்ட போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 52 பேட்டரிகள் மாயமானது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நிர்வாக இயக்குநர் சவுந்திர ராஜபெருமாளுக்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிர்வாக இயக்குநர் சவுந்திர பெருமாள் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அறிவியல் தொழிற்நுட்ப மையத்தின் சுவரை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது.