கரோனா தொற்று வட சென்னை பகுதிகளில் குறைந்துள்ள நிலையில், கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) 517 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தண்டயார்பேட்டையில் 57 மருத்துவ முகாம்களும், திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டையில் 52 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
மேலும், நேற்று நடைபெற்ற 517 மருத்துவ முகாம்களில் மொத்தம் 24 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன. அதில் 1495 பேருக்கு அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.