சென்னையில், கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை, சென்னையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் மொத்தமாக 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. இந்த 39 ஆயிரத்து 537 தெருக்களில் 31 ஆயிரத்து 736 தெருக்கள் கரோனா தொற்று இல்லாத தெருக்களாக உள்ளன. எஞ்சியுள்ள 7 ஆயிரத்து 801 தெருக்களில் மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 6 ஆயிரத்து 20 தெருக்களில் மூன்றுக்கும் குறைவான நபர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,781 தெருக்களில் மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனைத்துத் தெருக்களிலும் தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவ முகாம்கள் மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி இன்று மட்டும் 513 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 31 ஆயிரத்து 509 பேருக்குப் பரிசோதனை செய்ததில், 689 பேருக்கு சிறு அறிகுறி உள்ளதால், அவர்கள் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கலால் துறை அலுவலகத்தில் ஒருவர் உயிரிழப்பு