நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சீதை சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நிலத்தடி நீரைக் கொண்டு, குறுவை சாகுபடி செய்தனர்.
இந்நிலையில் மஞ்சளாற்றிலிருந்து சிந்தாமணி பாசன வாய்க்காலில் பொதுப்பணித் துறையினர் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துள்ளனர். ஆனால், வடிகால் வாய்க்காலான சரபோஜி சட்ரஸை திறந்துவிடாமல் அடைத்துவிட்ட காரணத்தால் தண்ணீர் வெளியேற வழியின்றி சீதை சிந்தாமணி கிராமத்தில் உள்ள வயல்களில் பாய்ந்தது.
இதனால், அந்த கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதையறியாமல், வயலுக்குச் சென்ற விவசாயிகள் தங்கள் பயிர் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, பொதுப்பணித் துறை பராமரிப்பாளரான லஸ்கர் வெங்கடேஷ் என்பவரிடம் கேட்டதற்கு சரியான பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அலட்சியமாக செயல்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.