தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் விலையில்லா புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் என மொத்தம் 20 கிலோ வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக வருவாயின்றி தவித்து வந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கடந்த 4 மாதங்களாக விலையின்றி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பச்சரிசி வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 20 கிலோ வரை குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பச்சரிசி தரமின்றி இருந்ததாகவும், உணவுக்குப் பயன்படுத்திடும் வகையில் தரமான அரிசி ரகங்களை வழங்கிட வேண்டும் என்றும் குடும்ப அட்டைதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்து வந்தனர்.
இதையடுத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்குவதற்காக தெலங்கானா மாநிலம் ஏலூரிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் பச்சரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 2600 டன் எடை கொண்ட பல்லாயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை முகக் கவசம் அணிந்த தொழிலாளர்கள் ரயிலில் இருந்து கீழிறக்கி லாரிகளில் அடுக்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து, அரசி மூட்டைகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துக் குடிமைப் பொருள் கிடங்குகளுக்கும் கொண்டுச் செல்லப்பட்டன.
இது குறித்து குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலர்கள் கூறுகையில், "பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தரமான, தூய்மையான பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பச்சரிசி அனுப்பி வைக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.