இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாக 1806ஆம் ஆண்டு, ஜூலை 10ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியின் 214ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1806ஆம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர், வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்களுக்குப் பல்வேறு அடக்கு முறைகளைக் கையாண்டார். அதில் குறிப்பாக, இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது, சமய சின்னங்களை உடலில் அணியக் கூடாது, தாடி வைக்கக்கூடாது.
பசுந்தோலால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிய வேண்டும், துப்பாக்கிகளை பன்றியின் கொழுப்பின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளைக் கொண்டு வந்தார்.
இதனால் வெகுண்டெழுந்த இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு, வேலூர் கோட்டையில் 1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் நள்ளிரவில் பல நூறு ஆங்கிலேய வீரர்களை எதிர்த்து சுட்டுக்கொன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது. வேலூர் கோட்டையில் ஏற்பட்ட முதல் சிப்பாய் கலகம் எனப்படும் சிப்பாய் புரட்சியே, நம் நாட்டின் விடுதலைப் போராட்டங்களுக்கும், சுதந்திரத்திற்கும் வித்திட்ட முதல் சம்பவம் ஆகும்.
இச்சம்பவத்தின் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஜூலை 10ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.