உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாடு அளவில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 84 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 404 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 144 தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு என்பதால் கடந்த மார்ச் மாதம் முதல் அரசு மதுபான கடைகளை மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருள்களின் புழக்கம் அதிகமாகியுள்ளது.
இதனால், கஞ்சா கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிர சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 12 நாள்களாக நடைபெற்றுவரும் சோதனைகளில் சென்னையில் மட்டும் கஞ்சாவை விற்பனை செய்ததாக ஏறத்தாழ 7 வழக்குகள் பதிவு செய்து 19 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 174.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தியதாக 2 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனமும், அவற்றிலிருந்து 20ஆயிரம் பணமும் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதில், வண்ணாரப்பேட்டையில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து 94 கிலோ கஞ்சாவும், செங்குன்றம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்பட 5 பேரிடமிருந்து 52 கிலோ கஞ்சாவும் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.