கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க ஜூலை 1 முதல் 15 வரை திட்டமிடப்பட்ட மீதமுள்ள தேர்வுகளை சிபிஎஸ்இயும், ஐசிஎஸ்இயும் ரத்து செய்திருந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து சிபிஎஸ்இ திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் முன்னிலையில் மத்திய அரசின் தலைமை துணை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது, மதிப்பீட்டுத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் வாரியம் தனது இணையதளத்தில் ஒரு மணி நேரத்தில் பதிவேற்றும் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் படி, பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
மூன்று பாடங்களுக்கு மேல் தேர்வுகளை முடித்தவர்களின் விஷயத்தில், ரத்து செய்யப்பட்ட ஜூலை தேர்வுகளுக்கான மதிப்பெண்களை மதிப்பிடுவதற்கு அவர்களின் சிறந்த மூன்று தேர்ச்சி பாடங்களில் சராசரி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதுவரை மூன்று தேர்வுகள் மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால், ஜூலை மாதத்தில் தவறவிட்ட தேர்வுகளை மதிப்பிடுவதற்கு சிறந்த இரண்டு பாடங்களின் சராசரி எடுக்கப்படும். டெல்லி போன்ற ஒரு சில நிகழ்வுகளில், மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் எழுதியிருந்தால், இந்த மதிப்பெண்களின் சராசரி நடைமுறை மதிப்பெண்கள் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
இந்த தேர்வு மதிப்பீட்டு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் வெளிவரும்.
எவ்வாறாயினும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கு எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் “விருப்பத் தேர்வுகளுக்கு” தேர்வு செய்யலாம். சுகாதார நிலைமை "மிகவும் உகந்ததாக" இருக்கும்போது இந்த விருப்பத் தேர்வுகள் நடத்தப்படும். விருப்பத் தேர்வுகள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படாது.
இந்த வழக்கில் மனுதாரர்களாக உள்ள வழக்குரைஞர் ரிஷி மல்ஹோத்ராவால், “பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் விருப்பத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்களா என்பதை தீர்மானிக்க கால அவகாசம் குறிப்பிடப்பட வேண்டும்” என்று வாதாடினார்.
மேலும், “மதிப்பீட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாணவர்கள் விருப்பத் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புகிறார்களா என்பதையும் குறிப்பிட வேண்டும். இதனை மாணவர்கள் 15 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் இது மேலும் வழக்குக்கு வழிவகுக்கும். அதேபோல் சிபிஎஸ்இ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என்ற திட்டத்தை அவர் பரிந்துரைத்தார்.
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “அக்டோபரில் நிலைமை உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை” என்றார். இந்த வழக்கில் துஷார் மேத்தாவின் வாதங்களை நீதிபதி ஏற்றுகொண்டார்.