இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன், வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நவ. 30ஆம் தேதி 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
அதில், மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், கள நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர், "என்னுடைய முடிவு எதுவாகயிருந்தாலும், அதற்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆதரவு தருவதாகத் தெரிவித்தனர். விரைவில் முடிவை அறிவிப்பேன்" எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது கட்சி தொடக்கம் குறித்து முடிவை அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகின்றனர். ட்விட்டரில் இப்போ இல்லனா! எப்பவும் இல்ல! என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.
இது குறித்து சென்னையில் பேட்டியளித்த ரஜினிகாந்த், "தமிழ்நாடு மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2021 தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ஆம் ஆண்டு கூறியிருந்தேன்.
மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் கரோனா காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பிற்குப் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெவித்துவருகின்றனர்.
ஆடிட்டர் குருமூர்த்தி:
தமிழ்நாட்டு மக்கள் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த முடிவை ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவரது ஸ்டைலில் சொன்னால், 'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்பது இந்தத் தருணத்தில் சரியாக உள்ளது. வாழ்த்துகள் ரஜினிகாந்த். 2021 தேர்தலில் தமிழ்நாடு ஆன்மிக அரசியலுக்குத் திரும்பும்.
இசையமைப்பாளர் அனிருத்:
இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்.
விசிக தலைவர் திருமாவளவன்:
ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு. ரஜினிகாந்த் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குழப்பமான முயற்சி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:
வாவ்... தலைவா.... வா தலைவா! மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! இப்போ இல்லனா! எப்பவும் இல்ல!
இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ்:
மிக்க நன்றி தலைவா. இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி!
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்:
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அதிமுகவை பாதிக்காது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது' - நடிகர் ரஜினிகாந்த்