தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நேற்று (செப்.14) கரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை மற்றும் வேலை இழப்புகள் குறித்து அரசாங்கத்திற்கு எத்தகைய தரவுகளும் கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “ மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள், ஊரடங்கு காலத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்புகளை இழந்தனர் என்று தெரியவில்லை.
நீங்கள் கணக்கிடவில்லை என்றால் இறப்புகள் ஏற்படவில்லை என்று பொருள் கொள்ள முடியுமா? புலம்பெயர் தொழிலாளர்களின் வலி என்பது அரசாங்கத்திற்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை,
இந்தியாவில் முன்னெச்சரிக்கையின்றியும், எந்தவொரு திட்டமிடலும் இன்றியும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ட அவல நிலையை உலகமே கண்டது. அவர்களின் இறப்புச் சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் இது தொடர்பான செய்திகள் கிடைக்காதது மோடி அரசாங்கத்திற்கு மட்டுமே. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இறக்கவில்லை என அரசாங்கப் பதிவுகள் இருந்தால் அவை உண்மையாகிவிடுமா” எனக் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.