முதலமைச்சர் உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், சமய தலைவர்களுடனான கூட்டம்நடத்தப்பட்டுவருகிறது. மாநில அளவிலும் அரசு சார்பில் தலைமைச்செயலாளர் தலைமையில் இரண்டு நாள்களுக்கு முன்பு கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின், சீக்கிய மதத் தலைவர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது. மக்களிடையே கரோனா பெருந்தொற்று நோயின் தீவிர பரவல் தன்மை குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், சமூக விலகல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்கவும் அரசோடு இணைந்து விழிப்புணர்வு வழங்கி ஒத்துழைக்க இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும், அரசுடன் சமயத்தலைவர்கள் கலந்துரையாடி பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
பெருந்தொற்று பொதுமக்களுக்கு பரவுவதை தவிர்க்க, பண்டிகை காலங்களில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று சாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்ககூடியதென்றும், இதற்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதை தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்ற பெருந்தொற்று நோய்அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து, நோயுற்றவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும் நடத்தவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரிய வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்து பேசி, அவை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகள், பெருந்தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும் அன்போடும் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளுடனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், கரோனா பாதிக்கப்பட்ட சிலர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் (Notified hospital for covid 19) மட்டும் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.
பெருந்தொற்று நோய் உள்ளதா என கண்டறியும் சோதனைக்குப் பின்பு நோய் அல்லாதவர்களை உடனுக்குடன் அவர்களது வீட்டுக்கோ அல்லது தனிமை படுத்தப்படும் மையங்களுக்கோ அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த நபர்களையும் தனிமைப்படுத்தும்போது, சமய தலைவர்கள் உதவியோடு அவர்களின் வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைபடுத்திக்கொள்ள, உரிய வசதிகளை செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கென அந்தந்த பகுதியில் தனிமைப்படுத்தும் தன்னார்வ குழுக்கள் அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், குடும்பங்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சமுதாய தலைவர்கள் முன்நின்று ஒத்துழைக்கவேண்டுமென்றும், இதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் அமைத்துள்ள மனநல மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் ஸ்கைப் போன்ற செயலிகளை பயன்படுத்தி ஆலோசனைகளைப் பெறலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசு தயாரித்துள்ள பல்வேறு பிரச்சார பிரதிகள், கையேடுகளை சமய அமைப்புகளுக்கு வழங்கவும், அதைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து மத தலைவர்களும் கோரியபடி, அவர்களின் ஆளுகையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கட்டிடங்களை தனிமை படுத்தப்பட்டவர்களுக்காக உரிய வசதிகளை அமைத்து பயன்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்க வேண்டும்.
மத தலைவர்கள் கேட்டுக்கொண்டபடி, வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறியப்பட்டு, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் இப்பணியில் தாமாக முன்வந்து ஈடுபடவேண்டும்.
காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூடுதல் கூட்டத்தை தவிர்க்கவும், சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இது தவிர, மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை, இன்று முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட ரிக் வண்டி தொழிலாளி திடீர் உயிரிழப்பு!