டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், வெள்ளி கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் 2020 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24இல் தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. நாளையுடன் (செப்டம்பர் 5) போட்டிகள் முடிவடையவுள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பி4 கலப்பு 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் முறையே தங்கம், வெள்ளி விருதுகளை வென்றுள்ளனர். மனீஷ் நர்வால் என்ற வீரர் தங்கத்தையும், சிங்ராஜ் வெள்ளியையும் கைப்பற்றியுள்ளனர். இதில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
இன்று பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா மூன்று தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் இன்று பதக்கம் வென்றவர்களுக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். ஹரியானா அரசு தங்கம் வென்ற மனீஷ் நர்வாலுக்கு ஆறு கோடி ரூபாயும், சிங்ராஜாவுக்கு நான்கு கோடி ரூபாயும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுஹாஸ் யாதிராஜ் 21-9, 21-15 என்ற நேர் செட்டில் இந்தோனேசிய வீரரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
யாதிராஜ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றிவருகிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் (எஸ்.ஹெச். 6) கிருஷ்ணா நகர் என்ற வீரர் ஒரு பதக்கத்தை (தங்கம் அல்லது வெள்ளி) உறுதிசெய்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் தகுதிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊர்பியின் படு கிளாமர்: அம்மாடியோவ் விமான நிலையத்திலேயே இப்படியா?