ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு (750 மிலி) ஒரு பாட்டில் வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளைப் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளர் மெளரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தார். அதில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ள போது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், வழக்குரைஞர் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து இருப்பதால் தனி மனித இடைவெளிப் பின்பற்றப்படவில்லை. எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அதுவரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
குன்றத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் திலீபன் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இம்மூன்று வழக்கிலும், மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி திறக்கப்பட்ட அனைத்து மதுபான கடைகளையும் ஊரடங்கு முடியும் வரை மூடுமாறு உத்தரவிட்டனர். அத்துடன் மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.