நாகையிலிருந்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் (38) உருவாக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் (2020) சட்டப்பேரவையில் அறிவித்தார். தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்தது.
இதையடுத்து இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலராக லலிதாவும் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதாவும் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாதா, “மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
குறிப்பாக, எந்தப் பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் என்னை நேரில் சந்திக்கலாம் அல்லது எனது செல்போன் எண்ணிற்குத் தொடர்புகொள்ளலாம். மேலும், கரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடித்தால் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக ஆலோசனைக் கூட்டம்!