சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா(கோவிட் 19) வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவிவருகிறது. முன்னதாக கேரளாவில் மட்டும் இருந்த வைரஸ் தொற்று தற்போது நாட்டன் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவிவருகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் இதுவரை 43 பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். தற்போது இந்தியாவில் 40 பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜம்மு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் மட்டும் ஐந்து பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் சமீபத்தில் இத்தாலி சென்றுவந்துள்ளனர். அதேபோல அவர்களுடன் தொடர்பிலிருந்த இருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது. 1,921 பேருக்கு கோவிட் தொற்று இருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 177 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் இதுவரை ஒருவரும் உயிரிழக்கவில்லை என்றும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பரவுவதைத் தடுக்க போக்குவரத்தைத் தடை செய்யுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்