லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.
சீனா தரப்பில் நிகழ்ந்த உயிரிழப்பு விவரங்களை அந்நாடு வெளியிடவில்லை. உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்டால் பதற்றம் நிலவி போர் சூழும் இடர் ஏற்படும் என சீனா மறுத்துவந்த நிலையில், 20-க்கும் குறைவானவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தைச் சேர்ந்த 16 பேரின் உடலை இந்தியா, அந்நாட்டிடம் ஒப்படைத்ததாக ஊடகத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், உயிரிழப்பு விவரம் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லைப் பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை, நமது பகுதியை யாரும் கைப்பற்றவில்லை என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனை வரவேற்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
சீன ராணுவத்தைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்ததாக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங் கருத்து தெரிவித்தார். இதனை விமர்சித்த குளோபல் டைம்ஸ், உண்மையான தரவுகளை வெளியிட்டால் இந்தியா அழுத்தத்திற்கு உள்ளாகும் எனத் தெரிவித்திருந்தது.