டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இரண்டு பக்க பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல்செய்தது. அதில், பெகாசஸ் தொடர்பான அரசுக்கு எதிரான மனுதாரர்களின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு மறுத்தது. மேலும், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோரை உளவுபார்த்ததாகக் கூறப்பட்ட புகார்களையும் அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
மத்திய அரசு தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில், அரசுக்கு எதிரான இந்த மனுக்கள் அனுமானத்தில் அடிப்படையில் தாக்கல்செய்யப்பட்டவை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்ய வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, பெகாசஸ் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் முழுமையடையாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசுகையில், உளவு செயலியை விற்பனை செய்யும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்துடன் எந்தவொரு பணப்பரிமாற்றமும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்த வகை மென்பொருளால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் தொலைபேசிகள் ஓட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், சசிகுமார் ஆகியோர் பெகாசஸ் தொடர்பாக தற்போதுள்ள நீதிபதிகள் அல்லது ஓய்வுபெற்ற நீதியரசர்களைக் கொண்டு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.
மேலும், வழக்கறிஞர் எம்.எல். சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் உளவு செயலி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இதையும் படிங்க: கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி