புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இக்கூட்டணியில், என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று(மே.2) முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது. என்ஆர் காங்கிரஸ் கட்சியை விட பாஜக குறைவான தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் முதலமைச்சர் பதவியை பாஜக கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தான் முதலமைச்சர் என, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்திருந்தபோதிலும், கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திலேயே முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று என்ஆர் காங்கிரஸ்- பாஜக அமைச்சரவை ஒரே நேரத்தில் பதவியேற்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.