உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில், பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்களை சிபிஐ தரப்பும் சமர்பிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுவதாக நீதிபதி சுரேந்திர யாதவ் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இரண்டாயிரம் பக்க தீர்ப்பையும் வாசித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 32 பேரில் 26 பேர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட ஆறு பேர் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உடனுக்குடன்... பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு