புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டார். புதியத் தவைராக அமரீந்தர் சிங் ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் அமரீந்தர் சிங் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “ஒழுங்கீனச் செயல்களை எள்ளவும் சகித்துக் கொள்ள மாட்டோம். அதையும் மீறி எந்தத் தலைவராவது ஒழுங்கீனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பஞ்சாப் காங்கிரஸில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக அங்கு கட்சித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் பதவியை துறந்து புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததுடன் படுதோல்வியை சந்தித்தது.
கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் 2017 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் 117 தொகுதிகளில் 77-ஐ வென்றிருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் எனது ரத்தம் கலந்துள்ளது: ராகுல் காந்தி