டெல்லி: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர், விவசாயிகளின் போராட்டம் குறித்து நாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா வழியாக டெல்லி சென்றடைந்தனர். இந்தப் இருசக்கர வாகன பயணம் குறித்து ஷிவ்சாகர் தேஜஸ்வி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “விவசாயிகள் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக டெல்லியில் போராடிவருகின்றனர். ஆனால் அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. இது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாங்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அந்த வகையில், விவசாயிகளின் போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழிப்புணர்வு பயணம்” என்றார்.
மற்றொருவரான விஸ்வநாத் கூறுகையில், “மக்களை தொடர்பு கொள்ளவே இந்தப் பயணம். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க அனைவரும் கைகோர்க வேண்டும். நாங்கள் டெல்லி சென்றடைய 6 நாள்கள் ஆகின. எங்களது கோரிக்கை மோடி அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்துக்கு செவி சாய்க்க வேண்டும்” என்றார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லை பகுதியில் கடந்த 100 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஐ எம் ஸாரி பிஎம்'- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!