டெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பூங்காவில் நேற்று (ஜூன் 20) ஏராளமானவர்கள் கூடி யோகா தினத்தை குறிக்கும் வகையில் யோகாசனங்கள் செய்தனர்.
இதில், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இது குறித்து யோகா குரு (மாஸ்டர்) ஷம்ஷாத் ஹைதர் பாகிஸ்தானிலிருந்து ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பாகிஸ்தானில் யோகா நாளுக்கு நாள் பிரபலமடைந்துவருகிறது.
இன்றைய காலகட்டத்தில் யோகக் கலை தேவையான ஒன்றாக மாறிவிட்டது. இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை. இதனை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளலாம். தினசரி யோகாசனங்கள் செய்ய மக்கள் இங்கு கூடுகிறார்கள்” என்றார்.
ஹைதர் ராவல்பிண்டியில் யோகா பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது யோகா பள்ளியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவரது பள்ளி தற்போது ஒரு பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அது, “பூங்காக்களை நிரப்புவோம், மருத்துவமனைகளை காலி செய்வோம்” என்பதே.
ராவல்பிண்டியில் 975 மீட்டர் உயரமுள்ள தில்லா ஜோகியன் மேடு ஒன்றும் உள்ளது. இதில் பல ஆன்மிக பெரியோர்கள், சான்றோர்கள், யோகிகள் தியானம் நடத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பு இங்கு யோகா பள்ளி ஒன்றும் இருந்துள்ளது. இன்றும் இதன் எச்சங்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் யோகா மத அடிப்படையிலானது என்ற எதிர்ப்பு உள்ளதே என்ற கேள்விக்கு, “பாகிஸ்தானியர்கள் யோகாவை அன்போடு ஏற்றுக்கொண்டனர், அனைத்து மதத்தினரும் எனது யோகா வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். இவ்வளவு ஏன்? மௌலானாக்கள் கூட யோகா வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர்” என்றார்.
மேலும், “யோகா என்ற சொல்லுக்கு ஒருங்கிணைத்தல் என்று பொருள். மனமும், உடலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வெறுப்பு மற்றும் தவறான உணர்வுகள் இருக்காது. வெறுப்பு என்பது பலவீனமானர்களுக்கு தோன்றும் உணர்வு. இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களை ஒருங்கிணைக்கும் கருவி யோகா” என்றார்.
இதையும் படிங்க: 'மாபெரும் தமிழ் துறவி' - வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டிய மோடி