டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பு மருந்துகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த தடுப்பூசிகளின் அறிவியல் ஆதாரங்களை மத்திய அரசு பகிர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "கரோனா தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது மனிதநேயத்திற்கு எதிரானது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசிகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அதன் பரிசோதனைச் சார்ந்த அறிவியல் ஆதாரங்களைப் பகிர வேண்டும்.
நாடு முழுவதும் கரோனாவால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் முடிந்த அளவிற்கு விரைவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க வேண்டும். பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. உரிய பரிசோதனை இன்றி தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிப்பது மிகவும் ஆபத்தானது" என்றார்.
இதையும் படிங்க: இந்தியா, இஸ்ரேல் கூட்டு முயற்சி - நடுத்தர ரக ஏவுகணை சோதனை வெற்றி