சென்னை: ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. இன்றைய சூழலில் தினசரி தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுகொண்டு தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தற்கொலை செய்திகள் இல்லாத நாளே இல்லை என்ற நிலைதான் உள்ளது.
மற்றொருபுறம் தற்கொலை சம்பவங்களை தடுத்திட உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மனநல ஆலோசனை, கவுன்சிலிங், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பது எப்படி? - ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் பேராசிரியர் பூர்ணசந்திரிகா அளித்த சிறப்பு பேட்டியில்,"உலகம் முழுவதும் 700 ஆயிரம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். ஒரு தனிமனிதன் தன்னுடைய வாழ்நாளில் 20 முறை தற்கொலைக்கு முயல்கின்றனர் என்று சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
18 வயதிற்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு சாதாரணமாக கேட்டப்பொருளை வாங்கித்தரவில்லை என்றவுடன் தாழ்வு மனப்பான்மையில் தோல்வி அடைந்து விட்டதாக கருதுகின்றனர். தோல்வித்தான் வெற்றியின் முதல்படி என்பதை இளம் பருவத்தினர் புரிந்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்திற்க்கவும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள கூடாது.
தற்கொலை நம்மை சுற்றித்தான் நடக்கிறது. ஏற்கனவே நம்மிடம் நன்றாக பேசிக் கொண்டு இருந்தவர், திடீரென அவர்களுடைய சிந்தனையில் அல்லது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக அவர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு அவர்களிடம் பேச வேண்டும். அதிலும் சரியாகவில்லை என்றால் மனநல மருத்துவர் ஆலோசகரை அணுகி தீர்வுக் காண வேண்டும்.
மனநல ஆலோசனை எண் 104: இன்றைய சூழலில் நிறைய மன உலைச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. உங்களுக்கு உதவுவதற்கு எப்போதும் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்படி உங்களால் மனநல மருத்துவரை சந்திக்க முடியாவிட்டால், தற்கொலையை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசின் 24 மணி நேர மனநல ஆலோசனை எண் 104 தொடர்புக் கொள்ளலாம். அதில் 24 மணி நேரமும் மனநல மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் மேலும் தமிழ்நாட்டில் மாவட்ட மனநலத் திட்டம், அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கும் ஆலோசனை வழங்கப்படுவதுடன், மருந்துகளும் அளிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ’நேஷனல் டெலிமெடிசியன்’ என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்காக ’மனசு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவைகள் மனநல மருத்துவக்கல்லூரி, பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை அம்பாசிட்டர்களாக நியமனம் செய்து அவர்களின் மூலம் மாணவர்களின் பிரச்சனையை தெரிந்துக் காெண்டு, அடுத்த நிலைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறையும் நடத்துக் கொண்டுத் தான் இருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர் படித்தால் மட்டுமே நல்ல வாழ்க்கை அமையும் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதனைத் தாண்டி பல படிப்புகள் பல ஆயிரம் தொழில்கள் இருக்கிறது. நாம் நினைத்த ஒன்று நடக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வது முயற்சிச் செய்கின்றனர். ஆனால் தற்காெலை எதற்கும் தீர்வல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் தற்கொலைத் தடுப்புக் கொள்கை நவம்பர் 2022 முதல் நடைமுறையில் உள்ளது. அதில் தற்கொலைகளை தடுப்பதற்கு செய்ய வேண்டி முறையை கூறியுள்ளனர். இதற்காக ஆலோசனை கொடுப்பது, சிகிச்சை அளிப்பது , மருந்துகளை கொடுப்பது போன்றவையும் தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது, 2030க்கு தற்கொலை எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..? - ஆதங்கத்தில் கிராம மக்கள்!