ஹைதராபாத்: உலகெங்கிலும் உள்ள மருந்தாளர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ அறிவியல் துறையில், மருந்தாளுநர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுபடுத்தும் வகையில் உலக மருந்தாளுநர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மருந்தாளர் என்பவர் ஒரு சுகாதார நிபுணர் ஆவர். அவர், மருந்துகளை சேமித்தல், கையாளுதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர். மருத்துவர்களை போலவே மருந்தாளர்களும் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
உலகளவில், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) வகிக்கும் பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி (இன்று) உலக மருந்தாளுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பால் (FIP) தொடங்கப்பட்டது.
FIP என்பது சர்வதேச மருந்து கூட்டமைப்பாகும். இது மருந்தியல், மருந்து அறிவியல் மற்றும் மருத்துவ கல்விக்காக உலகம் முழுவதும் செயல்படக் கூடிய அமைப்பாகும். 2009ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த கூட்டத்தின் போது மருந்தாளுநர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பணிகளை வெளிப்படுத்தவும் இந்த செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடுவது என FIP கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் FIP அமைப்பு ஒரு புதிய கருப்பொருளை (தீம்) வெளியிடுகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 'சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் மருந்தகம்' இது உலக அளவில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் மருந்தாளுநர்கள் மற்றும் மருந்தியல் வல்லுநர்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகின்றது. மேலும், மருந்து கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் மருந்தாளுநர்களின் பங்களிப்பைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நாளின் முதன்மையான நோக்கமாக உள்ளது.
மருந்தாளுநர்கள் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உயிர்காக்கும் பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். முந்தைய காலங்களில் மருத்துவர்களே மருந்துகளை தயார் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது, காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் மாற்றம் மருந்தியல் துறையே மருந்தாளுநர் பணிபுரியும் தனித்துறையாக உருவாக்கியது.
மருந்துக்கும், விஷத்துக்குமான வித்தியாசம் என்பது ஒரு நூலிழை அளவே ஆகும். உயிர்காக்கும் மருந்துகளை சரியாக வழங்குவதில் மருந்தாளுநர்களின் பங்கு என்பது இன்றியாமைததாகும். மருந்தாளுநர் இடைவிடாத அர்ப்பணிப்பு போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: "இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" - பாடும் நிலா எஸ்பிபி நினைவு தினம்!