இசையின் பயனை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் ஆகிய இருவரும், இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்வதற்காக 'உலக இசை' தினத்தை உருவாக்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் தேதி, உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 'இசை' என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைப்பதே இசை.
படித்தவர் முதல் பாமரர் வரை இசையாலேயே தங்கள் சூழலை மாற்றிக் கொள்ள முற்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் இணையத்தில் அன்றாடம் பார்க்கும் காணொலிகளில், இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக இசை தினமானது இன்று கொண்டாடப்படுகிறது.
இசையினால் நாம் அடையும் பலன்கள் நீண்டு கொண்டே செல்லும். ஆய்வின்படி புற்றுநோயில் இருப்போருக்கு இசையைக் கேட்க பரிந்துரைத்ததில், அவர்களுக்கு பதற்றம் குறைந்ததாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் 35 கோடி மக்கள் மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு இசையையே முதல் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இசை கேட்போரின் ஞாபகத்திறனின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிகுந்த இசை தினத்தை முன்னிட்டு, இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களுக்கு #WorldMusicDay என்ற ஹேஷ்டேக் மூலம் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்ட வேல்முருகன்