இன்று சர்வதேச பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றாட உணவு வகைகள் எத்தனையோ இருந்தாலும் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவுப் பட்டியலில் பிரியாணிக்கு என தனிக் இடம் இருக்கும். பிரியாணி என்ற சொல் வறுத்த என்ற பொருள் தரும் பாரசீக மொழியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாலைவனத்தில் பிறந்த பிரியாணி அனைவரின் பிரியமான உணவாக மாறியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. தற்போது ஈரான் என அழைக்கப்படும் முந்தைய பெர்சிய நாட்டின் உணவு தான் இந்த பிரியாணி. கேட்பவர்களின் நாக்கில் நடனமாடும் ருசி கொண்ட இந்த பிரியாணி பெர்சிய நாட்டின் வணிகர்களாலே அரேபியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்களால் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
என்ன தான் பெர்சியா நாட்டில் இருந்து பிரியாணி உணவு மற்ற நாடுகளுக்கு பரவி இருந்தாலும், தற்போது நாம் சாப்பிடும் பிரியாணி வகைகள் முற்றிலும் உள்நாட்டில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டவை. பொதுவாக பிரியாணி சீரக சம்பா, பாஸ்மதி, சோனா மசூரி, பாட்னா ரைஸ், உள்ளிட்ட 5 அரிசி வகைகளில் தயார் செய்யப்படுகின்றன.
உலகளவில் பார்க்கையில்.. ஏன் பிரியாணி உருவான இடமான ஈரானை காட்டிலும் இந்தியாவிலேயே அதிகளவில் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சீரக சம்பா பிரியாணி, லக்னோவி பிரியாணி, தாவத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி, மெமோனி பிரியா, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி என அதன் எண்ணிக்கையை கூறிக் கொண்டே போகலாம்...
ஒரு புறம் பிரியாணியில் உடலுக்கு தீங்கிழைக்கக் கூடிய அளவில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும், அடிக்கடி பிரியாணி சாப்பிடுவதால் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்றும் கூறப்பட்டாலும், பிரியாணியில் சேர்க்கப்படும் பல்வேறு மூலப் பொருட்கள் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதில் பிரியாணி இலையில் மட்டும் வைட்டமின், நார்ச்சத்துகள், மூச்சுத் திணறலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பியா நாடுகளில் பிரியாணி இலையை வைத்து தேநீர் தயாரித்து மக்கள் பருகி வருவதாக சொல்லப்படுகிறது.
பிரியாணி இலையை போல், ஏலக்காய், ஜாதிபத்திரி, சோம்பு உள்ளிட்ட ஒவ்வொரு மூலப் பொருளிலும் ஒரு மருத்துவ குணம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல பிரியாணியை அளவாக சாப்பிட்டு கொண்டாடி மிகிழுங்கள்.