குஜராத் மாநிலம் ஜுனகத் பகுதியில் ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு, அடுத்த நாளே விலை உயர்ந்த ஆபரணங்கள், பணத்தைத் திருடிச்செல்லும் பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பலைக் குஜராத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, ஜுனகத்தில் அம்பலியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், அடுத்த நாளே, அப்பெண் இளைஞரிடமிருந்த தங்க ஆபரணங்கள், 3 லட்சம் ரொக்க பணத்தையும் சுருட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட ஆண் புகார் அளித்துள்ளார். நிலைமையின் வீரியத்தை புரிந்துகொண்ட காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, கல்யாணம் செய்து ஏமாற்றும் திருட்டு கும்பல் ராஜ்கோட்டின் போபத்பாரா வட்டாரத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்தக் கும்பலிடம் திருமண வரன் பார்ப்பது போலவே காவல் துறையினர் சந்திக்க முயன்றனர். எதிர்பார்த்தபடியே, காவல் துறையின் பொறியில் அஞ்சலி என்ற பெண்ணும், அவரது தாயார் தனுபன் உட்பட 5 பேர் சிக்கிக்கொண்டனர். அனைவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை அந்த கும்பல் கூறியதாகத் தெரிகிறது. முக்கியமாக, அப்பெண் இதுவரை குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 18 பேரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை: சிறுமி தூக்கிட்டு தற்கொலை