மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் வெஸ்ட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கமல்காந்த் ஷா சொத்துக்காக அவரது மனைவி கவிதா ஷாவால் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து சாண்டாக்ரூஸ் வெஸ்ட் போலீசார் கூறுகையில், தொழிலதிபர் கமல்காந்த் ஷாவுக்கும் (45) கவிதாவுக்கும் (45) 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கமல்காந்த் ஷா தனது நெருங்கிய நண்பர் ஹிதேஷ் ஜெயின் என்பவருடன் இணைந்து ஆடை தொழில் (கார்மெண்ட்ஸ்) செய்து வந்தார்.
ஹிதேஷ் ஜெயின் தொழில்ரீதியான பேச்சுவார்த்தைக்காக கமல்காந்த் ஷா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது கவிதாவுக்கும் ஜெயினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அந்த வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் உறவை தொடர்ந்துவந்தனர். இதையறிந்த கமல்காந்த் ஷா இருவரையும் கண்டித்துவந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
கடந்த ஜூன் மாதம் கமல்காந்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதன்பின் சொத்து முழுவதும் கமல்காந்த் பெயருக்கு மாற்றப்பட்டது. இந்த சொத்தை அடைய ஜெயின் மற்றும் கவிதா திட்டம் தீட்டினர். ஆர்சனிக் என்னும் நச்சுப்பொருளை கமல்காந்துக்கு கொடுக்கும் உணவில் கவிதா கலந்துகொடுத்துள்ளார். இதை நீண்ட நாள்களாக செய்துவந்துள்ளார். இதற்கு ஜெயினும் உடந்தையாக இருந்துள்ளார். நாளடைவில் கமல்காந்த் உடல்நிலை மோசமடைந்தது. அந்தேரியில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் செப்டம்பர் 3ஆம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு செப்டம்பர் 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடற்கூராய்வு முடிவுகளில் ஆர்சனிக் மற்றும் தாலியம் நச்சுப்பொருள் காரணமாக உடல்நிலை மோசமானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மருத்துவமனை நிர்கவாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தது. அதன்பின் கவிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஜெயின் உடன் சேர்ந்து சொத்துக்காக நச்சுப்பொருளை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கமல்காந்த் ஷா-கவிதா ஷா தம்பதிக்கு 20 வயது மகள், 17 வயது மகன் உள்ளனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்புணர்வு