புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமரின் பேச்சு குறித்த காணொலியை வாட்ஸ்அப்பில் பதிவிட்டு, கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'பிரதமர் கூறியது போலப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த பத்தாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள் நடைபெறக்கூடாது என தடுக்கப்பட்டது. இதனால் கிராமப்புறப் பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்துவிட்டது. மேலும் போதிய சுகாதாரமின்மை, மோசமான நீர் மேலாண்மை, வறட்சி, பள்ளிக்கல்வி மற்றும் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன' என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், புதுவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று (டிச.26) நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "காஷ்மீரில் அனைத்துத் தலைவர்களையும், சிறை வைத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதுதான் ஜனநாயகமா? என்று பிரதமர் மோடியை விமர்சித்தார். புதுச்சேரி அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனப் பிரதமர் குறை கூறுவதை உடனே நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தாமதம் ஆவதற்கு கிரண்பேடி தான் காரணம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் - முதலமைச்சர் நாராயணசாமி