டெல்லி: ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து தான் விலகப்போவதாகவும், ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். புதிய சிஇஓ ஒரு பெண் என்றும், அவர் இன்னும் ஆறு வாரங்களில் பொறுப்பேற்பார் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். அதேநேரம், புதிய சிஇஓ-வின் பெயரை மஸ்க் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், புதிய சிஇஓ-வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ(linda Yaccarino) என்பவர் நியமிக்கப்பட இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அனைவரின் கவனமும் லிண்டா யாக்கரினோ மீது திரும்பியுள்ளது. யார் இந்த லிண்டா யாக்கரினோ? என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லிண்டா யாக்கரினோ, என்பிசி யுனிவர்சல் (NBC Universal) என்ற மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார். அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது சர்வதே அட்வர்டைசிங் மற்றும் பார்ட்னர்ஷிப்களின் தலைவராக இருக்கிறார். யாக்காரினோவின் குழு, 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான விளம்பர விற்பனையை ஈட்டியது என்றும், ஆப்பிள், ஸ்னாப்சாட், பஸ்ஃபீட், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாக்காரினோ ட்விட்டர் சிஇஓவாக பொறுப்பேற்றால், ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரதாரர்களின் அச்சத்தை நீக்கி, விளம்பர விற்பனையை மேம்படுத்துவார் என்றும், ட்விட்டரின் உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற மஸ்க்கின் விருப்பத்தையும் நிறைவேற்றுவார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்பிசி நிறுவனத்திலிருந்து அவர் விலகினால், அது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
முன்னதாக கடந்த மாதம் மியாமியில் நடந்த ஒரு விளம்பர மாநாட்டில் யாக்கரினோ மஸ்க்கை பேட்டி எடுத்தார். அப்போது, விளம்பர விற்பனையில் சிறப்பாக செயலாற்றுவதாக யாக்கரினோவை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் - எலான் மஸ்க் அதிரடி!