கரோனா தொற்றை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பு, பாலியல் ரீதியாக குரங்கம்மை அதிகம் பரவலாம் என தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மத்திய ஆப்பிரிக்காவை மையமாக கொண்டும், மேற்கு ஆப்ரிக்காவை மையமாக கொண்டும், குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணைகளை கொண்டவர்கள் மற்றும் பைசெக்ஷூவல் என அழைக்கப்படும் தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களிடையே இந்த தொற்று வேகமாக பரவுவதாக அதானோம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதில் 98 விழுக்காட்டினர் பைசெக்ஷூவல் அல்லது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்றவற்றின் மூலம் தொற்று எளிதாக மற்றவருக்கு பரவும் என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் திரேன் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாது, தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அசுத்த ஆடைகளை தொடும்போதும் வைரஸ் பரவும் என்றும் திரேன் குப்தா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் 18,313 பேருக்கு கரோனா பாதிப்பு