உலகத்திற்கே உயிர் பயத்தை உருவாக்கிய கரோனா நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி, நள்ளிரவு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நாளடைவில் பல தனியார் மருத்துவமனைகள் சிறிது சிறிதாக மூடப்பட்டன.
புதுச்சேரியில் சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முழுவதும் மூடப்பட்டது. இக்காரணத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மற்ற நோயாளிகளின் மீது கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்ட அரசு, கரோனா நோயில் இருந்து மக்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது.
இதற்கிடையே புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு கோவிட் மருத்துவமனையில் 600 படுக்கைகளும்; ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 300 படுக்கைகளும் உள்ளன. இது தவிர, புதுச்சேரி அரசு மருத்துவமனை புறநோயாளிப்பிரிவு தனிக் கட்டடத்தில், வேறு ஒரு இடத்தில் இயங்கி வருகிறது. நவம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி, கரோனாவால் இதுவரை, புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 585 ஆகும். அதேபோல், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 355 ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே, கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன், நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் என கரோனா பாதிப்பு உயர்ந்து வந்தது. இது நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, நூறுக்குக் கீழாக குறைந்து வருகிறது.
இதனால் புதுச்சேரி மாநில அரசு பொது மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் புறநோயாளிகளின் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது. அதில் இருந்தே, நாளொன்றுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட அரசு விதிகளை கடைப்பிடித்து நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். மேலும் மக்களைப் பொறுத்தவரையில் மருத்துவமனைக்கு வந்தால், கரோனா தொற்று ஏற்படும் என்ற ஐயப்பாடும் ஒரு ஓரத்தில் மனதில் துருத்திக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களிடம் இன்றுவரை குறையவில்லை.
இதேநிலை தான், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட ஜிப்மர் மருத்துவமனையிலும் நீடிக்கிறது. இங்கும் கடந்த அக்டோபர் மாதம் முதல் புறநோயாளிகளுக்குத் தொலைபேசி வாயிலாக, சிகிச்சைக்கு முன் அனுமதி வழங்கப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் தரப்படுகின்றன.
சிலருக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் கரோனா காலத்திற்கு முன், ஒரு மாதத்திற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண், இதயம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவமனையில் மீண்டும் முழுமையாக அறுவை சிகிச்சைப் பிரிவுகள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து தினமும் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள், பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளி மேகநாதன் கூறுகையில், 'வியாதிக்காக நானும் இங்கு வந்து சிகிச்சைப் பெற்று செல்கிறேன். நோயாளிகள் வீட்டில் முடங்கி கிடக்காமல், மருத்துவமனைக்கு வரவேண்டும். அனைத்து சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுவிட்டது. கரோனா பயம் தேவை இல்லை. இப்போது கரோனா குறைந்துள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு மேலும் செய்து தர வேண்டும்' என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்
இதுகுறித்து தனசேகர் என்பவர் கூறுகையில், 'உடல்நிலை சரியில்லாதவர்கள் கரோனாவிற்கு பயந்துகொண்டு சிகிச்சைக்கு வராமல் உள்ளனர். ஆனால், சிலர் சமூக இடைவெளி கடைப்பிடித்து வரிசையில் நின்று தான் செல்கின்றனர். நானும் அவ்வாறு தான் சென்றேன். பழைய கூட்டம் தற்போது இல்லை. மக்களிடம் கரோனா பயம் சற்று குறையவில்லை' என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், 'புதுச்சேரியில் புறநோயாளிகள் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெறுவதில் சிலர் அச்சம் கொள்கின்றனர். மேலும் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனை அரசு சரிசெய்ய வேண்டும். ஜிப்மர் மருத்துவமனை போன்ற மருத்துமனைகள் நடமாடும் வேன் மூலம் பிரத்யேக மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, கிராமப் பகுதியில் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இனம்கண்டு, மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவம் பார்த்தால் நோயாளிகள் பயன் பெறுவர். ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் நோயாளிகள் முன் அனுமதி பெற்று சிகிச்சைக்கு வர வேண்டும் என அறிவுறுத்துவது கிராம மக்களுக்கு பயன்தருவது கடினம்.
மேலும் அறுவை சிகிச்சைப் பிரிவுகள் முழுவதையும் திறந்து, நோயாளிகளுக்கு அரசு சிகிச்சை அளிக்க வேண்டும்' என்றார்.
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அரசு, கரோனா கட்டுப்பாட்டில் முனைப்புடன் செயல்பட்டாலும்; மற்ற நாடுகளில் இரண்டாவது கரோனா அலை ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்கை ஒருபக்கம் இருந்தாலும்; கிராம மக்களுக்கு சிகிச்சை தடைபடாமல் கிடைக்க மருத்துவமனைகள் முன்பதிவு முறையை சாமானியனுக்கும் கிடைக்கும்படி எளிமைப்படுத்த வேண்டும்.
மேலும் நோயாளிகளிடம் உள்ள கரோனா பயத்தால் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு, உரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதுவே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.