போல்பூர்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான டாக்டர். சுர்பியோ குமார் சாது, சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம் உடையவர் ஆவார். கடந்த 35 ஆண்டுகளாக பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இவருக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்தாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், சாது சைக்கிளில் செல்வதாக தெரிவித்தார்.
அவரது சைக்கில் "பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள்", "மரங்களை நடவும்" மற்றும் "சுற்றுச்சூழலைக் காப்போம்" என்ற வாசகப் பலகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பதாகைகளை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, "எனது சைக்கிளில் எழுதப்பட்டிருப்பதை மக்கள் சில சமயங்களில் நிறுத்தி படிக்கிறார்கள். அவற்றைப் படித்த பிறகு ஒருவர் மரம் நட்டால் அது எனக்கு மிகவும் திருப்திகரமான விஷயம்" என்று சாது கூறினார்.
சாது விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் படித்து, விவசாயம் குறித்த ஆராய்ச்சியை முடித்த பிறகு, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்கஞ்சில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார்.
அங்கு 19 ஆண்டுகள் பணியாற்றிய பின், போல்பூர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து, கடந்த 25 ஆண்டுகளாக அங்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் நடத்தி வருகிறார். அவர் தனது பள்ளியில் பசுமையை அதிகரிக்க மரங்களை நட்டுள்ளார்.
மேலும் கல்விக்கான அவரது பங்களிப்பிற்காக 'சிக்ஷா ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவர் வாழும் வரை சுற்றுச்சூழலுக்கான தனது பணியைத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேசம் விட்டு தேசம் வீசும் காதல் அலை; பிரான்ஸ் இளம்பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி இளைஞர்