கிளாஸ்கோ(ஸ்காட்லாந்து): தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர்.
இவர் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும், இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதற்காகப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். இஸ்திரிப் பெட்டிக்கு கரியை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மாணவி வினிஷா இதைக் கண்டுபிடித்துள்ளார்.
டாப் 15க்குள் இடம்பெற்ற வினிஷா
இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தொடங்கிய எர்த்ஷார்ட் விருதிற்கு (Earthshot Prize) தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களில் வினிஷா முதல் 15 இறுதிப் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கு சென்று பேசினார்.
அப்போது, "எர்த்ஷாட் விருது வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள், தீர்வுகளை ஆதரிக்க வேண்டும். பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எங்களின் முயற்சிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
பழைய சிந்தனைகளை விட்டுச் செயலில் ஈடுபடுங்கள். நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் உங்களை வழிநடத்துவோம். நல்ல எதிர்காலத்தை கட்டமைப்போம். என்னுடைய இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
மேலும், எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். அதனால் தலைவர்கள் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று பேசி அரங்கில் இருந்தவர்களை அதிர வைத்தார்.
இதையும் படிங்க: தொடர்ந்து சீனாவில் தொழில் செய்ய விரும்பாத பெருநிறுவனங்கள் - வெளியேறிய யாஹூ