டெல்லி: ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்.25) இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்ற ஓலாப், மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஆகியோரது தலைமையில் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓலாப் கூறுகையில், "இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான உறவு சிறப்பாக உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரினால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், நமது பொருளாதாரக் கொள்கைகளை மீறும் வகையில் உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த 1,800 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நமக்கு திறமையான ஊழியர்கள் தேவை. தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அம்சங்கள் இந்தியாவில் வளர்ந்து வருகின்றன. பல திறமையான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியா திறமைவாய்ந்த நாடு. அதன் ஒத்துழைப்புடன் நாங்கள் பலன்களை எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.
அதன்பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை ஜெர்மனி, இந்தியாவிடம் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடு. இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியிலான வர்த்தக உறவு உள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையேயான உறவு ஜனநாயக மதிப்புகளை அடிப்படையாக கொண்டவை.
இந்தியா மற்றும் ஜெர்மனி மக்கள் இடையேயான நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. "மேக் இன் இந்தியா”, "தற்சார்பு இந்தியா" ஆகிய திட்டங்கள் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இந்த வாய்ப்புகளில் ஜெர்மனியின் ஆர்வத்தால், ஊக்குவிக்கப்படுகிறோம்" என்றார். இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் நாளை (பிப்.26) கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்கிறார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் - விதிகளை மாற்றி சூசகம்!