கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும். நிறைவாக எட்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் அங்கு ஹாட்ரிக் வெற்றி பெற மம்தா பானர்ஜியும், மாநிலத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜகவும் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை நடத்திவருகின்றன.
இங்குள்ள சவுத் 24 பாரகானாஸ் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நிற்கிறார். இவர் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ஸ்ரபந்தி சட்டர்ஜி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் 2ஆம் தேதிதான் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை ஸ்ரபந்தி சட்டர்ஜி கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். மேற்கு பெஹலா தொகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள். எனக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பேன்” என்றார். பாஜக நேற்று (மார்ச் 18 ) 148 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இவர்கள் 5,6,7,8 கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!