கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொது மக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் நீட்டித்து சலுகை வழங்கியது.
அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் இந்த காலகட்டத்தில் வட்டித்தொகை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் பதிலளித்த அரசு, ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்ற அனைவரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31வரையிலான காலக்கட்டத்தில் செலுத்த வேண்டிய வட்டிக்கான வட்டி தொகையை செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 2020 மார்ச் முதல் ஆகஸ்ட்வரை காலகட்டத்தில் கடன் வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய அரசு துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தன்னால் இயன்ற செயல்களை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
அதேவேளை, கடன் தள்ளுபடி என்ற நடவடிக்கையை மேற்கொண்டால் அரசு சுமார் ரூ.6 லட்சம் கோடி இழப்பை சந்திக்க நேரிடும். மேலும், வங்கி தொடர்பான விவகாரங்களில் அரசு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் தலையிட முடியாது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: 32 வயது விவசாயி மரணம்: முதற்கட்ட விசாரணையில் காவல்துறை