போல்பூர்: மேற்கு வங்கம் மாநிலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர், மதம் மற்றும் தத்துவத் துறையில் பௌத்த தத்துவத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார். மியான்மரில் இருந்து வந்த இவர், சுமார் 8 ஆண்டுகளாக போல்பூரில் படித்து வருகிறார்.
போல்பூரில் உள்ள இந்திரா பாலியில் வாடகை வீட்டில் இருந்து படித்து வருகிறார். இவரது மாணவர் விசாவுக்கான ஆண்டு காலம் 2024ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில், நேற்று (செப்.21) மதியம் சிலர் கருப்பு நிற காரில் வந்து மாணவியின் புகைப்படத்தைக் காட்டி, மாணவி இருக்கும் வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர்.
அதன்பின், மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை காரில் ஏற்றி விட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இதனையறிந்த அம்மாணவியின் நண்பர்கள், இது குறித்து விஸ்வபாரதி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, போல்பூர் காவல் நிலையத்திற்கு விஸ்வபாரதி அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போல்பூர் காவல் துறையினர், மாணவி தங்கியிருந்த வீட்டின் அருகே உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இரண்டு வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
ஆனால், மாணவி கடத்தப்பட்டாரா அல்லது வெளிநாட்டவர் என்பதால் மத்திய ஏஜென்சி மாணவியை கைது செய்ததா என்பது காவல் துறையினருக்கு உறுதியாகத் தெரியவில்லை. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை!