டெல்லி : எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) 16 கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் குழு, இரண்டு நாள் பயணமாக, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்கிறது.. அங்கு, ஜுலை 29 மற்றும் 30ஆம் தேதிகளில், இன மோதல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி, அங்கு ஆய்வு மேற்கொள்ளும் அவர்கள், அங்கு நிலவி வரும் இனக்கலவரத்தைத் திறம்படத் தீர்ப்பதற்கு அவர்கள் நிலச் சூழலை நேரடியாக மதிப்பீடு செய்து, மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த எம்.பி.க்கள் குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் மணிப்பூர் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாட உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நிவாரண முகாம்களுக்குச் சென்று அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளனர். . ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30ஆம் தேதி)மணிப்பூர் ஆளுநரை சந்திக்கவும், இந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு முடிவு செய்து உள்ளது.
இந்த எம்பிக்கள் குழுவில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கௌரவ் கோகோய், ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங், கனிமொழி கருணாநிதி, சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஏ.ரஹீம், பேராசிரியர் மனோஜ் குமார் ஜா, மஹுவா மாஜி, ஜாவேத் அலி கான், பிபி முகமது பைசல், அனீல் பிரசாத் ஹெக்டே, இடி முகமது பஷீர், என்கே பிரேமச்சந்திரன், சுஷில் குப்தா, டி ரவிக்குமார், அரவிந்த் சாவந்த், தொல் திருமாவளவன், ஜெயந்த் சிங் மற்றும் பூலோ தேவி நேதம் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.
இதற்கிடையில், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இனக்கலவரம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த சில நாட்களாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளிலும் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி உள்ளன. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கிய மணிப்பூர் கலவரம், குறைந்தது 160 உயிர்களைப் பலி வாங்கி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்ட நிலையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குழு, மணிப்பூர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லை கடந்த காதல்.. ஆந்திர இளைஞரை கரம் பிடித்த இலங்கை பெண்!