சண்டிகர்: பஞ்சாபில் "வாரிஸ் பஞ்சாப் டி" என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
அப்போது, அம்ரித் பால் சிங் தனது உதவியாளரை விடுதலை செய்யக்கோரி கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அம்ரித் பால் சிங்கின் உதவியாளரை போலீசார் விடுவித்தனர்.
பின்னர், அம்ரித் பால் சிங்கையும் அவரது கூட்டத்தையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 19ஆம் தேதி அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் அம்ரித்பாலின் உறவினர் ஹர்ஜித் சிங், அவரது உதவியாளர்கள் தல்ஜித் சிங் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் மற்றும் பகவந்த் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்ரித் பால் சிங் டர்பன் இல்லாமல், கூலிங் கிளாஸ், ஜாக்கெட் அணிந்து கொண்டு மாறுவேடத்தில் டெல்லியில் சுற்றித்திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அவர் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் அம்ரித் பால் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், பஞ்சாபில் தற்போது நடந்துவரும் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சீக்கியர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படி, அகல் தக்த்தின் ஜதேதரிடம் கோரியிருப்பதாகவும், இந்த விஷயத்தில் சீக்கியர்களின் நலனுக்காக ஜதேதர் சாஹிப் தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடியோவில் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தன்னை பெரும் போலீஸ் படையுடன் தன்னைத் துரத்தி கைது செய்ய முயன்றதாவும், இறைவன் தன்னை காப்பாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் நடவடிக்கை தவறானது என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அம்ரித் பால் சிங் வெளியிட்ட வீடியோ பிரிட்டனில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அது மூன்று நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் கணக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக அம்ரித் பால் சிங் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பொதுமக்கள் உதவ வேண்டும்" - பஞ்சாப் காவல்துறை!