பெங்களூரு: நாடு முழுவதும் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிமாக பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து, பல மாவட்டங்களில் வீடு முழுவதும் நீர் புகுந்து மக்கள் அவதியில் உள்ளனர்.
குறிப்பாக கர்நாடக தலைநகரான பெங்களூருவில், அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர் மழை வெள்ள பாதிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் பெங்களூரில் வசித்து வரும் மக்கள் கடும் அவதியிலுள்ளனர்.
இந்நிலையில், பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவரும், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, உணவகம் ஒன்றில் தோசை சாப்பிடும் வீடியோ ஒன்றை சமூக வளைதலங்களில் பதிவிட்டு, அனைவரும் சாப்பிட வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், “இன்ஸ்டாவில் Penne மசால் தோசை தொடர்பான படங்களை பார்த்தேன். சாப்பிடும் ஆசை வந்ததால் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுகிறேன். நீங்களும் வாங்க. நிச்சயமாக ஒருமுறை வந்து ருசித்து பாருங்க. உப்பிட்டு கூட மிகவும் சுவையாக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தேஜஸ்வி சூர்யாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரு வெள்ளச்சூழலை சமாளிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு