புதுச்சேரி: மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிகிறது. புதிய எம்பியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது.
என்ஆர்.காங்கிரஸ், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களே பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறுத்தப்படும் வேட்பாளர்தான் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்ற நிலை புதுச்சேரியில் உள்ளது. மனுத்தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளன. ஆனால், இதுவரை இக்கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவது யார் என்பது தெரியவில்லை.
இக்கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாநிலங்களவை எம்பி பதவியைப் பெற தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, மாநிலங்களவை எம்பி பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்கித் தரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி, அதனை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான ஐசரி கணேஷ் நேற்று புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் திடீரென கலந்துகொண்டார். கோயில் வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் ஆசியும் பெற்றார். இதைத்தொடர்ந்து ஐசரி கணேஷிடம் ரங்கசாமி பேசினார். இந்தச்சந்திப்பை தொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட ஐசரி கணேஷ் வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரும் இந்தப் பதவியை பெற முயற்சி செய்து வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த சூழலில் ரங்கசாமியை ஐசரி கணேஷ்சந்தித்து பேசியது முக்கியத்துவம்பெறுகிறது. முதலமைச்சர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பாஜக தலைமையும் தொடர்ந்து தங்கள் தரப்பில் ரங்கசாமியிடம் பேசி வருகின்றனர்.