பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை பாஜக இன்று (அக். 7) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்கள், முதலமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர்களான வருண் காந்தி, மேனகா காந்தி ஆகியோரை தேசிய செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை. முன்னதாக, லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் வருண் காந்தி சட்டரீதியான விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, அவர் சிபிஐ விசாரணை வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தொடர் அழுத்தம்
மேலும், விவசாயிகள் மீது கார் ஏற்றப்படும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
வருண் காந்தி தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து அவரை நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு நிர்வாகிகள் நியமனம்
இதையடுத்து, தேசிய செயற்குழுவில் தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமை நியமித்துள்ளது. சிறப்பு அழைப்பாளர்களாக ஹெச். ராஜா, குஷ்பூ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீண்டு நாள்களுக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டம் வரும் அக்டோபர் 18ஆம் தேதியும், தேசிய செயற்குழு கூட்டம் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி!